Sunday, 27 October 2019

திருக்குறளில் பிரபஞ்ச ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதியும் திருக்குறளும்


திருக்குறளில் ஏராளமான வாழ்வியல் கருத்துகள் நிரவி உள்ளன. வாழ்க்கையை செப்பனிட சீரிய கருத்துகள் உள்ளன. வெற்றி செல்வம் வளமை ஆகியன பெற்று சீரும் சிறப்புமாக வாழ வள்ளுவர் வழிகாட்டுகிறார்.

ஈர்ப்பு விதியின் வழிமுறைகள் கூட திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.
ஈர்ப்பு விதிகளை சொல்லும் குறள்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஈர்ப்பு விதி ஏன் வேலை செய்யவில்லை?
மனதால் கற்பனை செய்து அது அப்படியே நடப்பதாகக் காட்சிப் படுத்தி ஆழமாக நம்பினால் நாம் நினைத்ததை ஈர்க்கலாம், அடைவோம் என்று ஈர்ப்பு விதி வழிகாட்டிகள் சொல்கிறார்கள். அது சரியே.
ஆனாலும் சில பேருக்கு நினைத்தது நினைத்தபடியோ, அல்லது நினைத்த காலத்துக்குள்ளோ நடைபெறுவதில்லை.  ஏன் ?

ஈர்ப்பு விதி பொய்யா? 
இல்லை ஈர்ப்பு விதி வேலை செய்யும்.

1.ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

உணர்வுபூர்வமான எண்ணம்: வெறும் கற்பனை மட்டும் போதாது. மனச் சித்திரமாக மட்டும் பார்த்தல் போதாது. உள்ளே கருத்துருவாக்கம் செய்து காண்பதை உணர்வுபூர்வமாக நடப்பதாக உணர வேண்டும்.
எப்படி திரைப்படக்காட்சியில் லயித்து அழுகிறோமோ, சிரிக்கிறோமோ, அது போல கற்பனையோடு இணைந்து உண்மையெனக் காண வேண்டும்.  நாம் விரும்பியது இப்போதே நடப்பதாக மனதால் உணர வேண்டும். அந்த உணர்வு உடலில் பாய வேண்டும்.
அப்படி செய்தால் வள்ளுவர் சொல்வது போல
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”   (குறள் 666)


திடமாக நினத்தால் நினைத்ததை நினைத்தபடி அடையலாம் என திருவள்ளுவர் சொல்வதைத் தான் உணர்வுபூர்வமாக சிந்திக்க வேண்டும் என ஈர்ப்பு விதி சொல்கிறது.

2)ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.   

நிலைநிறுத்தல்
ஆழ்மனது கட்டளைக்கு அடி பணியும். என்றாலும் ஒரே ஒரு முறை சொன்னால் ஆழ்மனது செய்து விடுவதில்லை.
ஆழ்மனதை பதப்படுத்த வேண்டும்.
மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லும் முறையே ஆழ்மனதைப் பக்குவப்படுத்தும் முறை.  மீண்டும் மீண்டும் சொல்வதைத்தான் ஆழ்மனது நிலை நிறுத்திக் கொள்ளும்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்      (
குறள் 540)

ஒருவன் தான் எண்ணியதை மறவாது திரும்பத் திரும்ப எண்ணி செயல்பட்டால் அவன் எண்ணியதை அவனால் எளிதில் விரைவில் அடைய முடியும் என்று வள்ளூவர் அழகாக ஆழ்மன ஈர்ப்பு விதியை விளக்குகிறார்,
எனவே உற்சாகமாக அடிக்கடி அடைய வேண்டியதை எண்ணிப் பாருங்கள்
அப்போது நினைத்தை ஈர்க்கலாம். வாழ்வில் சிறக்கலாம்.

3) ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

பொறாமைப்படாது இருத்தல்
தனக்குக் கிடைக்காத ஒன்று தன் அருகில் இருக்கும் ஒருவருக்குக் கிடைத்து விட்டால் மனது உடனே வருத்தப்படும். அதனைத் தொடர்ந்து யாருக்குக் கிடைத்ததோ அவரை நினைத்து பொறாமைப் பட வைக்கும்.  பெறாமையே பொறாமைக்குக் காரணம். அப்படி நாம் பெறாமையால் பொறாமைப் பட்டால், அந்த மன அதிர்வு நமது வறுமையையே வளர்த்து விடும். வளமையை விரட்டி விடும்.
ஈர்ப்பு விதி வேலை செய்ய வேண்டுமானால் மனதில் எள் அளவும் யார் மீதும் எதன் மீதும் பொறாமை வைக்கக் கூடாது.
பொறாமை எண்ணம் வந்தால் எண்ணத்தை விரட்டி விட வேண்டும்.
நமக்கும் நாம் வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வள்ளுவர் சொல்கிறார் படியுங்கள் –

அவ்வித்து  அழுக்கறு  உடையானை  செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்      (குறள் 167)

மகாலஷ்மியாகிய திருமகள் பொறாமை நெஞ்சம் உடையனை  விட்டு விலகி சென்று விடுவாள்; செல்லும் முன் தன் அக்கா மூதேவிக்கு கைகாட்டிச் சென்று விடுவாள் என்கிறார் திருவள்ளுவர்.
பொறாமைப் படாது இருந்தால் பெறும் செல்வம் பெருஞ்செல்வமாகும்.
எனவே வாழ்த்துவோம். வெற்றியாளரை வாழ்த்துவோம். செல்வந்தரை வாழ்த்துவோம். எல்லோரையும் வாழ்த்துவோம்.
வாழ்த்துவோம் !  வாழ்வோம் !!

4. ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

தவறான ஆசைகளை தவிர்த்தல்
தனக்கு சொந்தமில்லாத ஒன்றை அடுத்தவருக்கு சொந்தமான ஒன்றை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று மனதாலும்  நினைக்ககூடாது. மனதால் நினைப்பதும் கூட திருடுவதற்கு சமம்.
முறையற்ற ஆசை ஈர்ப்பு விதியை முறித்து விடும்.
அடுத்தவர் பொருளுக்கு நான் ஆசைப்படுவதில்லை. திருட நினைப்பதும் இல்லை. திருடியதும் இல்லை. அப்படியென்றாலும் ஏன் ஈர்ப்பு விதி வேலை செய்ய வில்லை?
திருடுவது கவர்ந்து கொள்வது மட்டும் முறையற்ற செயல் இல்லை
ஒருவருக்கு உரிய கூலியை குறைத்துக் கொடுத்து அவரை மனம்  நோகச்செய்தால் ஈர்ப்பு விதி வேலை செய்யாது.
ஒரு பொருளை விலை கூட்டி மதிப்பை விட கூடுதலாக பணத்தைப் பெற்றால் ஈர்ப்பு விதி வேலை செய்யாது.
பேரம் பேசி அடித்து அதன் மதிப்பை விட விலை குறைத்து பொருளைப் பெற்றால் ஈர்ப்பு விதி வேலை செய்யாது
நாம் ஒருவருக்கு செய்ய வேண்டிய கடமையை, வேலையை, முறையாகவும் சரியாகவும் செய்து தரவில்லை என்றால் ஈர்ப்பு விதி வேலை செய்யாது
பணம் கொடுக்கல் வாங்கலில் மனசாட்சிப்படி இல்லாமல் சாமர்த்தியமாக செயல்பட்டால் ஈர்ப்பு விதி வேலை செய்யாது.
ஒருவருக்குச் சேர வேண்டிய பொருளை அவர்கள் கேட்க வில்லை என்பதால் நீங்களே வைத்துக் கொண்டிருந்தால் ஈர்ப்பு விதி வேலை செய்யாது.

அதைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்  (குறள் 282)

மற்றவர்களுக்குச் சொந்தமானதை மனதாலும் எண்ணக் கூடாது. அவர்களை வஞ்சித்து சூது செய்து அவர்கள் பொருளை கவரவும் எண்ணக்கூடாது என்கிறார் திருவள்ளுவர்..
அப்படி விலகி நின்று நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வாழ்வில் நல்லதே நடக்கும். கேடு வராது என்று வள்ளுவர் வேறொரு  குறளில் சொல்கிறார்,.
பிறர் பொருளுக்கு மனசாலும் ஆசைப்படாதவனைத் தேடி செல்வம் தானே வந்தடையும் என்கிறார் திருவள்ளுவர்.

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு   (குறள் 179)

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
எனவே உங்களுக்கு உரியதை மட்டும் நினைத்து, உங்களுக்கு உரியது உங்களிடம் வந்து சேர்ந்து விடும் என்ற முழு நம்பிக்கையில் வளமை சிந்தனையோடு எல்லோரையும் வாழ்த்திக் கொண்டேயிருந்தால் ஈர்ப்பு விதி வேலை செய்யும். நீங்கள் நினைத்தது நெருங்கி வரும்.

5 ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

எரிச்சல் அடையாது இருத்தல்
நினைத்தது நடக்கவில்லை என்றால் எரிச்சல் வருவது இயல்புதானே எனச் சொல்லலாம். மனுசன்தானே? சீற்றம் வருவது சகஜம்தானே ? சொல்லலாம்.
ஆனால் சீற்றமோ எரிச்சலோ வந்தால் ஈர்ப்பு விதி விலகி இருக்குமாம். சற்று தாமதமாகுமாம்.
அப்ப கோவம் வந்தா ஈர்ப்பு விதி வேலையே செய்யாதா?
செய்யும். ஆனால் தாமதம் ஆகும். எப்பவாவது கோவம் வந்தால் கூட பரவாயில்லை. எப்பவுமே கோவமா இருந்தாலோ, மசுல எரிச்சலோடும் சலிப்போடும் இருந்தாலோ ஈர்ப்பு விதி வேலை செய்யாது. மகிழ்ச்சியான மன நிலையே ஈர்ப்பு விதி வேலை செய்ய சரியான மனநிலை.
அப்படி கோவமே இல்லாதவனுக்கு செல்வம் எப்படி வரும் என்று வள்ளுவர் சொல்றார் படிங்க.

உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்  (குறள்
309)

மனசுல கொஞ்சம் கூட கோபம் என்பதே இல்லாமல் இருப்பவன் மனசு நினைத்ததையெல்லாம் உடனுக்கு உடன் அடைந்து விடும் என்று ஐயன் வள்ளுவர் கூறுகிறார்,

கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து   (குறள் 130)

கல்வி கற்று மனதுள் கோபம் வராமல் எவன் காத்துக் கொள்கிறானோ அவனை அடைய தகுந்த நேரம் பார்த்து நல்ல விஷயங்கள் எல்லாம் தாமே வந்து அடையும் என்று வள்ளுவர் சொல்கிறார்
எனவே கோபம் எரிச்சல் தவிர்த்து எது நடந்தாலும் வாழ்த்துவோம்.
ஈர்ப்பு விதி வேலை செய்யும்! வாழ்க வளமுடன்!


6 ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
வலிமையான விருப்பம்
விருப்பத்தை ஆழமாக மனதிலே விதைத்தால் பிரபஞ்சம் அதனை கணக்கில் எடுத்துக் கொண்டு விருப்பத்தை நிறைவேற்ற விரையுமாம்.
செயலின் துல்லியத்தை விட விருப்பத்தின் நோக்கமே செயல் சரி அல்லது தவறு என நிர்ணயிக்கிறது.
நேர்மையான விருப்பங்கள் நிறைவேறாமல் சென்றதில்லை. தாமதம் ஆகியிருக்கலாம்; தவறி இருக்காது

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்   (குறள்
1023)

திருவள்ளுவர் சொல்கிறார், எவன் ஒருவன் தன் குடும்பத்தை வாழ வைக்க உறுதி எடுத்து உழைக்க நினைக்கிறானோ அவனின்  நேர்மையான  நோக்கத்தை பூர்த்தி செய்ய தெய்வமே முன்வந்து உதவி செய்யும்.
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு  ( குறள் 1024)

தன் குடும்பத்தைக் காப்பாற்ற சலிப்படையாது உழைப்பவருக்கு வெற்றி வழிகள் அதிகம் அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்க அவசியம் இல்லாமல் தானாகவே மனதில் உதிக்கும்
நேர்மையோடும், தீவிர விருப்பத்தோடும், முயற்சி செய்பவர்க்கு பிரபஞ்சம் முன் வந்து முன்னுக்கு வரும் வழிகளைக் காட்டுகிறது.
 நேர்மையோடு உழைப்போம்; ஈர்ப்பு விதியை அழைப்போம்.

7.ஈர்ப்பு விதி வேலை செய்ய சில அடிப்படை விதிகள் இருக்கின்றன.
அவைகளை வள்ளுவர் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
பகிர்தல் பலன் தரும்
இருப்பதை சந்தோஷமாக பகிர்ந்து தருபவருக்கே செல்வம் பெருகி வருகிறது
சலித்துக் கொண்டவர்கள், சிதைந்து போகிறார்கள்.
கொடுப்பதை மகிழ்வோடு மன நிறைவோடு வாழ்த்தி கொடுத்தால் செல்வம் வளரும். வளமை வாழும்.
காக்கைக் கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள (குறள்
527)

காக்கை தனக்குக் கிடைத்த இரையை மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; அதுபோல தன்னிடம் உள்ளதை சொந்த பந்தங்களோடு பகிர்ந்து கொள்பவனுக்கு எல்லாவிதமான நன்மிய தரும் செல்வங்களும் வந்து சேரும் என்கிறார் திருவள்ளுவர்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்  (குறள்
  84)

நல்ல விருந்தினராய் வந்தவரை மகிழ்ச்சியோடு வரவேற்று மரியாதை செய்கிறவன் வீட்டில் மனமகிழ்ந்து லஷ்மி வாழ்வாள் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை  (குறள்
322)

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், சான்றோர்கள் சொன்ன நல்ல காரியங்களில் எல்லாம் சிறந்த காரியம் ஆகும் என்றும் வள்ளுவர் சொல்கிறார்.
பகிர்ந்து கொடு பெருகும் செல்வம்

பெறுவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்.
10 ரூபாய்க்கு பொருளை விற்றோமானால் அதன் பலன் வாங்குபவர்களுக்கு 10 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். 
நமக்குக் கிடைக்கும் பலனை விட கொடுக்கும் பலன் கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் வளமை நம்மிடம் வாசம் செய்யும்
பிரபஞ்சம் நேரம் பார்த்து  நம் இல்லத்தை நிரப்பும்.
பிரபஞ்சம் துணை நின்றால் பஞ்சம் ஏது ?
வளமை சிந்தனையில் வாழ்வோம்!
வாழ்வை வளமையாக்குவோம்!

நிறைவுரை
பிரபஞ்சம் வளமையானது. வலிமையானது. பாரபட்சமற்றது. நம் மன எழுச்சிக்கு ஏற்ப நமக்கு வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது
நிலைநிறுத்தல், பொறாமைப்படாது இருத்தல், கவராது இருத்தல், தவறான ஆசைகளிய தவிர்த்தல், எரிச்சல் படாது இருத்தல், வலிமையாக விரும்புதல், இருப்பதை மகிழ்வோடு பகிர்தல், பெறுவதை விட கொடுப்பதை கூடிதலாக்குதல் என்ற அடிப்படை விதிகளை முழுமையாக மனம் ஒப்பக் கடைபிடித்து வந்தால் உங்களின் விருப்பத்தை கற்பனையில் காணும்போதே பிரஞ்ச ஈர்ப்பு விதி உடனடியாக வேலை செய்து வெற்றி செல்வம் வளமை எல்லாம் தரும்

www.vrnlp.com 











No comments:

Post a Comment